கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டத்தை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2020-05-09 23:30 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்துக்கான கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டம் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா என்கிற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு 20 பேருக்கு ரூ.7 லட்சத்து 35 ஆயிரத்து 900 நகைக்கடனை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நோய் பரவல் காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து உள்ளதால், மக்களின் நலன் கருதி அவசர தேவையை நிறைவேற்றும் வகையில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கொரோனா சிறப்பு நகைக்கடன் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரமும், கிராமுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 6 சதவீத வட்டி வீதத்தில் 3 மாத தவணை காலத்துக்கு வழங்கப்படுகிறது. மேலும், ரூ.2 லட்சம் வரை காப்பீடு வசதியும் இலவசமாக வழங்கப்படும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஈரோடு மாவட்டத்தில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 25 நாட்களாக புதிய தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. ஆரஞ்ச் நிறத்தில் இருந்து பச்சை நிறத்துக்கு மாறி உள்ளோம். பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு, கடைகள் திறக்கப்படும் நேரங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பிற பகுதிகளில் எந்தெந்த கடைகள், எப்போது திறக்கலாம் என்ற விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்புகின்றனர்.

வருகிற கல்வியாண்டில் பள்ளிக்கூடங்கள் திறக்கும் அன்று மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பை, ஷூ போன்றவை கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பாடப்புத்தகம், நோட்டுகள் போன்றவை அச்சிடும் பணி 80 சதவீதம் முடிவடைந்து சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கால் ஜவுளித்துறை முடங்கி உள்ளது. இதனால், மாணவ-மாணவிகளுக்கான சீருடைகள் தயாரிப்பு பணி தாமதமாகிறது. இருப்பினும், கொரோனா பிரச்சினை சீரானதும் விரைவாக சீருடைகள் தயாரிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். பள்ளிக்கூடங்கள் எப்போது திறப்பது என்பது குறித்து, முதல்-அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழு முடிவு செய்து அறிவிக்கும்.

தனியார் பள்ளிக்கூடங்களில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத மாணவர்கள் சேர்க்கைக்காக ரூ.218 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிக்கூடங்களில், கல்வி கட்டணத்தை செலுத்தக்கூறி கட்டாயப்படுத்தக்கூடாது. இதுபற்றி, ஏற்கனவே சுற்றிக்கை அனுப்பி உள்ளோம். ஓமலூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்கான டோக்கன் வழங்கியது தொடர்பான புகார் வந்தது. நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்