வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய 334 தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

வெளிமாநியங்களில் இருந்து வேலூர் திரும்பிய 334 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கி ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Update: 2020-05-10 00:31 GMT
அணைக்கட்டு, 

அணைக்கட்டு தாலுகாவில் உள்ள ஜார்த்தான் கொல்லை, பலாம்பட்டு, பீஞ்சமந்தை, அல்லேரி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கேரளா, மைசூர், கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய பகுதிகளுக்கு கூலிவேலைக்காக கடந்த ஜனவரி மாதம் சென்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் ஊர் திரும்ப முடியாமலும், சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் அவதிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அணைக்கட்டு தாலுகாவை சேர்ந்த 334 பேரை 17 அரசு பஸ்களில் வேலூருக்கு அனுப்பிவைத்தனர். அந்த 334 பேரும் நேற்று காலை 9 மணிக்கு பள்ளிகொண்டாவை அடுத்த அகரம்சேரி அரசினர் உயர் நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் தங்கவைக்கப்பட்டனர். அணைக்கட்டு தாசில்தார் முரளிகுமார், ஊராட்சிஒன்றிய ஆணையாளர் இமயவரம்பன், வட்டாரவளர்ச்சி அதிகாரி வின்சென்ட் ரமேஷ்பாபு, துணை வட்டாரவளர்ச்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் அவர்களை வரவேற்று பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் தங்கவைத்து அவர்களுக்கு உணவு வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து வட்டாரா மருத்துவ அலுவலர் கைலாஷ் தலைமையில் 5-கும் மேற்பட்ட மருத்துவர்கள் அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். பரிசோதனையில் 334 பேருக்கும் எந்தவிதமான நோய் தொற்று அறிகுறிகளும் இல்லாததால் அவர்களை மலைகிராமத்திற்கு 30 வேன்கள் மூலம் பாதுகாப்பாக அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் வெங்காயம் உள்பட அனைத்து மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டது. தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டது.

துணை தாசில்தார்கள் விஜயகுமார், திருக்குமரன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்ரீராஜ், சிவசக்தி வெங்கடேசன், சக்திவேல், சரளா, அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்