நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு: ஊரடங்கால், முடங்கிப்போன கருவாடு உற்பத்தி தொழில்

நாள் ஒன்றுக்கு ரூ. 1 கோடிக்கு வர்த்தகம் நடந்து வந்த நாகையில் ஊரடங்கால் கருவாடு உற்பத்தி தொழில் முடங்கியுள்ளது.

Update: 2020-05-11 00:15 GMT
நாகப்பட்டினம், 

நாள் ஒன்றுக்கு ரூ. 1 கோடிக்கு வர்த்தகம் நடந்து வந்த நாகையில் ஊரடங்கால் கருவாடு உற்பத்தி தொழில் முடங்கியுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருவாடு தயாரிக்கும் பணி

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குடிசைகள் அமைத்து கருவாடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நெத்திலி, வாளை, கிழங்கா, ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, திருக்கை, சேதமடைந்த வஞ்சரம் மற்றும் கோழித்தீவனத்துக்கு பயன்படுத்தப்படும் கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களில் கருவாடு தயாரிக்கப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வர்த்தகம்

இங்கு தயாராகும் கருவாடுகள் திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தில் தினந்தோறும் சுமார் 500 கிலோ முதல் 1 டன் வரையிலான கருவாடு தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும்.

தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. இந்த காலகட்டத்தில் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே தொழிலுக்கு செல்வதால் குறைந்த அளவிலான மீன்களே கிடைக்கிறது.

வாழ்வாதாரம் பாதிப்பு

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 40 நாட்களுக்கு மேலாக அமலில் உள்ளதால் கருவாடு உற்பத்தி செய்யும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பைபர் படகுகளும் கடலுக்கு செல்லவில்லை.

ஓரிரு பைபர் படகுகள் மட்டுமே கடலுக்கு செல்வதால், குறைந்த அளவிலேயே கிடைக்கும் ஓட்டாம்பாறை என்கிற மீனை கொண்டு கருவாடு தயாரிக்கின்றனர். இதனால் இந்த தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்க வேண்டும்

இதுகுறித்து கருவாடு தயாரிக்கும் தொழிலாளி ஒருவர் கூறியதாவது:-

அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுக கருவாடு காயவைக்கும் தளத்தில் ஏராளமான மீன் வகைகளை கொண்டு கருவாடு தயாரித்து வந்தோம். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. எனவே போதிய அளவிலான மீன்கள் கருவாடு தயாரிப்பதற்கு கிடைப்பதில்லை. இந்த தடைக்காலத்தில் குறைந்த தொலைவில் சென்று தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவினால் கடலுக்கு செல்லவில்லை.

பொதுவாக மீன்பிடி தடைக்காலங்களில் ஓரளவு கருவாடு தயாரிக்கும் தொழில் நடைபெறும். தற்போது ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கருவாடுகளை கொண்டு செல்ல லாரிகள் வராததால் சில குடிசைகளில் தேக்கமடைந்து கிடைக்கிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கருவாடு தயாரிக்கும் தொழில் செய்பவர்களுக்கு அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு

இதுகுறித்து கருவாடு தயாரிக்கும் தொழிலாளர்கள் இளையபெருமாள்-வசந்தா கூறியதாவது:-

நாங்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து இங்கு வந்து கருவாடு தயாரிக்கும் தொழிலாளர்களாக வேலைசெய்து வருகிறோம். நாள் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை எங்களுக்கு கூலி கிடைக்கும். தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக படகுகள் கடலுக்கு செல்லாததாலும், மீன்கள் கிடைக்காததாலும் எங்களுக்கு வேலை இருப்பதில்லை. ஊருக்கு செல்லலாம் என்றால், வெளிமாவட்டங்களுக்கு செல்ல தடை உத்தரவு உள்ளது. எனவே நாங்கள் இருவரும் வேதனையில் இருக்கிறோம். எனவே அரசு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கருவாடு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் எங்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யவேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்