காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் 45 ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் 45 ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

Update: 2020-05-11 22:30 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் அக்கம்மாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின் சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் தூர் வாரும் திட்டப்பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடிமராமத்து பணி என்பது மக்கள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை சீரமைத்து நிர்வகித்தல் ஆகும். தமிழ்நாட்டில் பழங்காலத்தில் நீர்நிலைகளை புனரமைக்க அந்தந்த பாசன அமைப்பின் விவசாயிகளால் கூட்டமாக குடிமராமத்து என்ற பெயரில் சீரமைப்பு பணிகள் செய்து நீர் மேலாண்மை சிறப்பாகவும் செம்மையாகவும் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் விவசாயிகள் முன்னிலையில் குடிமராமத்து பணி தொடங்கி வைக்கப்பட்டது.

45 ஏரிகள்

கடந்த 2016-17-ம் ஆண்டில் முதற்கட்டமாக காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பில் 22 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் தொடங்கி சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக, கடந்த 2017-18-ம் ஆண்டில் காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டு தொகைக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு 12 ஏரிகள் அந்தந்த விவசாய சங்கங்கள் மூலம் பணிகளை தொடங்கி வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 3-வது கட்டமாக 2019-20-ம் ஆண்டில் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு ரூ.5 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டு தொகைக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு 11 ஏரிகளில் அந்தந்த விவசாய சங்கங்கள் மூலம் பணிகள் தொடங்கி செய்து முடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை குடிமராமத்து பணிகள் மூலம் ரூ.9 கோடியே 73 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 45 ஏரிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.

4-வது கட்டமாக...

இந்த குடிமராமத்து திட்டப்பணிகளில் 4-வது கட்டமாக, காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ரூ.17 கோடியே 31 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டுத் தொகைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 32 ஏரிகளில் அந்தந்த விவசாய சங்கங்கள் மூலம் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் அக்கம்மாபுரம் கிராமத்தில் 2020-21-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் அக்கமாபுரம் ஏரிக்கரையில் உள்ள முள்செடிகள் அகற்றி பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல் மற்றும் வரவு கால்வாயை தூர்வாரி அகலப்படுத்துதல் போன்ற பணிகளை வடகிழக்கு பருவ மழை காலத்திற்கு முன்பாக முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏரி தண்ணீரை பயன்படுத்தும் அக்கம்மாபுரம் ஏரி பாசன விவசாய சங்கம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி, கண்காணிப்பு என்ஜினீயர் முத்தையா, பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) செயற்பொறியாளர் திலகம், உதவி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், பாஸ்கரன், இளநிலை என்ஜினீயர் மார்கண்டேயன், உதவி என்ஜினீயர் பாஸ்கரன், அக்கம்மாபுரம் ஏரி சங்க தலைவர் பழனி, ஒப்பந்ததாரர் எடையார் பாக்கம் மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்