கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 1000 பேருக்கு முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் 1000 பேருக்கு முழு உடல் பாதுகாப்பு கவச உடைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

Update: 2020-05-11 22:45 GMT
கோவை,

கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண் குமார், வி.சி.ஆறுக்குட்டி, அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை சண்முகம், வி.பி.கந்தசாமி, கஸ்தூரிவாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் 1000 பேருக்கு முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நோய்த்தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகர பகுதி மற்றும் புறநகர் பகுதியில் கொரோனா தொற்று அதிகம் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க அனைத்து அலுவலர்கள், டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், போலீசார் என்று அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

எனவே மாவட்டத்தில் பணியாற்றி வரும் 20 ஆயிரத்து 450 பேருக்கு முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர நாங்கள் மாவட்டத்தில் உள்ள 8 லட்சம் பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கி உள்ளோம். இதுதவிர எங்கள் நல்லறம் அறக்கட்டளை மூலம் 20 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோன்று தமிழகத்தில்தான் அதிகளவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. நடுத்தர மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்குமே நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாங்கள் இதை விளம்பரத்துக்காக செய்யவில்லை. அதுபோன்று பிரச்சினை என்று எதுவும் வந்தாலும் முதுகை காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை. அந்த பிரச்சினையை தீர்க்க ஒன்று சேர்ந்து பணியாற்றி வருகிறோம். பொதுமக்களும் இந்த கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிந்து கொள்வதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி, துணைத்தலைவர் அமுல்கந்தசாமி, நகர்நல அதிகாரி சந்தோஷ்குமார், உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்