மாவட்டத்தில் 95 சதவீத கடைகள் திறப்பு சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 95 சதவீத கடைகள் திறக்கப்பட்டதால் சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Update: 2020-05-12 03:46 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.

இதுவரை காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. ஆனால் தமிழக அரசு நேற்று முன்தினம் டீக்கடைகள், பெட்டிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஜெராக்ஸ் கடைகள், டைல்ஸ் கடைகள், மரக்கடைகள் உள்ளிட்ட 34 வகையான கடைகளை திறக்க அனுமதி அளித்தது.

இதையொட்டி நேற்று நாமக்கல் நகரில் பெட்டிக்கடை, டீக்கடை, கண்ணாடி கடை உள்ளிட்ட 34 வகையான கடைகளும் திறக்கப்பட்டன. 1½ மாதங்களுக்கு பிறகு நேற்று கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. இதேபோல் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருந்தது.

டீக்கடைகள்

இருப்பினும் கடைவீதியில் நகை கடைகள், ஜவுளி கடைகள் திறக்கப்படவில்லை. எனவே அப்பகுதி வெறிச்சோடி கிடந்தது. இதேபோல் சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் சென்டர்கள் திறக்கப்படவில்லை.

பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டீக்கடைகளை பொறுத்த வரையில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்ற அரசின் உத்தரவால் விற்பனை சற்று மந்தமாகவே காணப்பட்டது.

அபராதம்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டன. இதனால் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பியபோல இருந்தது. இருப்பினும் ஆட்டோ, பஸ் போன்ற வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் முக கவசம் அணியாமல் வந்தவர்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறிய நபர்களுக்கு அபராதம் விதித்தனர்.

அரசின் உத்தரவுபடி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தனியார் அலுவலகங்களும் குறைந்த பணியாளர்களுடன் செயல்பட தொடங்கியது.

ராசிபுரம்

ஊரடங்கு தளர்வு காரணமாக டீக்கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் நேற்று ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெரும்பாலான டீக்கடைகள் திறக்கப்படவில்லை. கடையில் உட்கார்ந்து டீ, காபி குடிக்கக்கூடாது என்றும் பார்சல் மட்டுமே வினியோகம் செய்ய வேண்டும் என்பதால் கடைகள் திறக்கப்படவில்லை. போக்குவரத்தும் இல்லை. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்றும் அதனால் வியாபாரம் சரியாக நடக்காது என்றும் கருதி கடைகள் திறக்கப்படவில்லை. பழக்கடைகளும் திறக்கப்படவில்லை. ஓரிரு பெரிய ஓட்டல்கள் திறந்து வைத்து பார்சல் மட்டும் வழங்கினர். சிறிய ஜவுளிக்கடைகள், செல்போன் கடைகள், கெடிகார விற்பனை கடைகள் உள்பட அனுமதிக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டன. ஓரிரு பீடாக்கடைகள் திறந்து இருந்தன. வணிக நிறுவனங்கள் திறந்து வைத்திருந்தாலும் அதிகளவில் பணியாளர்கள் வரவில்லை. வணிக நிறுவனங்களில் சமூக விலகல் கடைபிடித்தனர். பெரும்பாலானவர்கள் முககவசம் அணிந்தே வந்திருந்தனர். அதேபோல் சாலைகளில் சென்றவர்களில் பெரும்பாலும் முககவசம் அணிந்து சென்றனர்.

மேலும் செய்திகள்