கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் கவலை

ஊரடங்கு உத்தரவு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2020-05-13 03:14 GMT
கிருஷ்ணகிரி,

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன வசதி இல்லாமலும், தக்காளியை பறிக்க கூலி ஆட்கள் வராததாலும், தக்காளியை வாங்க வியாபாரிகள் வராததாலும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 25 கிலோ எடை கொண்ட ஒரு கூடை ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள் கவலை

இதனால் கூலி ஆட்களுக்கு கொடுக்க கூடிய சம்பளம் கூட கிடைப்பதில்லை. இதன் காரணமாக தக்காளிகளை விவசாயிகள் பறிக்காமல் தோட்டங்களிலேயே விட்டு விடுகின்றனர். மேலும் கால்நடைகளை மேய விடுகின்றனர். மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படும் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் அவற்றை சாலையோரம் கொட்டி செல்கிறார்கள். ஒரு சில விவசாயிகள் கிடைத்த விலை போதும் என மார்க்கெட் மற்றும் சந்தைகளில் விற்பனை செய்து வரும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு காரணமாக சந்தைகள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதி இல்லை. மேலும் கூலி ஆட்களும் கிடைப்பதில்லை. இதனால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சில்லறையாக ஒரு கிலோ ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பறிக்கும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க கூட போதவில்லை. விலை வீழ்ச்சியால் பல விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விடுகின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு போக்குவரத்து சீரடைந்து, சந்தைகள் திறக்கப்பட்டால் தான், சரியான விலை கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்