ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதால் விழுப்புரம் நகரில் தடுப்பு கட்டைகள் அகற்றம்

ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதால் விழுப்புரம் நகரில் தடுப்பு கட்டைகள் அகற்றப்பட்டன.

Update: 2020-05-13 22:37 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா நோய் தொற்றால் 299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளை சிவப்பு மண்டலமாக மாவட்ட நிர்வாகம் பிரித்துள்ளது.

இதன் அடிப்படையில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகராட்சி பகுதிகள், விக்கிரவாண்டி, செஞ்சி ஆகிய பேரூராட்சி பகுதிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் என 93 இடங்கள் சிவப்பு மண்டலமாக உள்ளது. இப்பகுதிகளை தவிர மற்ற நபர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் வரை தற்காலிக சோதனைச்சாவடிகள், தடுப்பு கட்டைகள் அமைத்து சுகாதாரத்துறையினர், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

தடுப்பு கட்டைகள் அகற்றம்

இந்நிலையில் நேற்று சிவப்பு மண்டலத்தில் இல்லாத இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சோதனைச்சாவடிகள், தடுப்பு கட்டைகளை போலீசார் அகற்றினர். அந்த வகையில் விழுப்புரம் பெருமாள் கோவில் தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட இடங்களில் இருந்த தடுப்பு கட்டைகள், தற்காலிக சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டன.

மேலும் ஊரடங்கு உத்தரவினால் விழுப்புரம் நகரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் சாலையில் விழுப்புரம் ரெயில்வே மேம்பாலம், ரெட்டியார் மில் அருகில் ஆகிய இடங்களில் தடுப்பு கட்டைகள் அமைத்து அடைக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதையொட்டி அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டைகள் அகற்றப்பட்டு அவ்வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும் செய்திகள்