சமூக இடைவெளியை கடைபிடிக்காத டீக்கடைகளுக்கு அபராதம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லை மாநகர பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத டீக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Update: 2020-05-14 22:45 GMT
நெல்லை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் சில தளர்வு செய்து அரசு அறிவித்துள்ளது. அதன்படி டீக்கடைகள், சிறிய கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க சில கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

டீக்கடைகள் பார்சல் டீ தான் வழங்க வேண்டும், ஊழியர்கள் முக கவசம் அணிய வேண்டும், சிறிய கடை உரிமையாளர்கள் முக கவசம் அணிந்து தான் பொருட்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

சில கடைகளில் அரசின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நெல்லை மாநகராட்சியில் உள்ள நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களில் நேற்று அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமையில், தச்சநல்லூர் உதவி ஆணையாளர் அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் தச்சநல்லூர் மண்டலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நெல்லை டவுன் மண்டல பகுதியில் உதவி ஆணையாளர் சொர்ணலதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அந்தேணி, முருகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

நெல்லை டவுன் ரதவீதிகளில் டீக்கடைகளில் முக கவசம் அணியாத ஊழியர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத டீக்கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு கடைக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று மட்டும் சுமார் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பழக்கடை, பழஜூஸ் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்