திருவண்ணாமலை மாவட்டத்தில் அம்மா உணவகங்கள் மூலம் 19 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தகவல்

ஊரடங்கு காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் 19 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2020-05-15 00:25 GMT
ஆரணி, 

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 52 நாட்களாக ஆரணி நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தனது சொந்த செலவில் ஒருநாளைக்கு சுமார் 1,400 நபர்களுக்கு காலையில் இட்லி சாம்பார், பகலில் கலவை சாதம், இரவில் சப்பாத்தி குருமா வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா?, உண்மையான பயனாளிகள் வாங்கி பயனடைகிறார்களா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 17-ந் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. அதுவரை அம்மா உணவகத்தில் உணவு வழங்கிட நானும், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகனும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 4-வது முறையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தினாலும் தொடர்ந்து உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆரணி அம்மா உணவகத்தில் 52 நாட்களாக இதுவரை 72 ஆயிரத்து 800 பேர் பயனடைந்துள்ளனர்.

அதேபோல திருவண்ணாமலை நகரில் உள்ள இரண்டு அம்மா உணவகத்திலும் ஒரு நாளைக்கு 13 ஆயிரம் நபர்கள் வீதம் இதுவரை 6 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கும், செய்யாறு, வந்தவாசி நகரில் உள்ள அம்மா உணவகங்களில் நாள் ஒன்றுக்கு 800 நபர்கள் வீதம் 83 ஆயிரத்து 200 நபர்கள் என மொத்தம் மாவட்டத்தில் 5 அம்மா உணவகங்களிலும் கடந்த 52 நாட்களாக 19 லட்சத்து 20 ஆயிரம் நபர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார், நகராட்சி பொறியாளர் ஆர்.கணேசன், ஆவின் துணைத் தலைவர் பாரி பி.பாபு, அ.தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன், நகர மாணவர் அணி செயலாளர் குமரன் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்