பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை: நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை

பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-05-15 22:45 GMT
நெல்லை, 

அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரும் பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா வைரசை முற்றிலும் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும், அரசு பிறப்பித்துள்ள 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவினை பின்பற்றும் வகையில், பல்வேறு உத்திகளை கையாண்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் வணிக வளாகங்கள், மளிகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள், இறைச்சி கடைகள் என அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், அங்கு பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து உள்ளனரா? என்பதை ஆய்வு செய்கிறோம். மேலும், முககவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு முககவசம் அணிந்து வராதவர்களுக்கு எவ்வித பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பணிகளுக்காக வெளியில் வரும் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முககவசம் அணிந்தும், 100 சதவீதம் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆனால் கடந்த நாட்களில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டும் நெறிமுறைகளை ஒரு சிலர் பின்பற்றாமல், முககவசம் அணியாமலும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பது மாநகராட்சி அலுவலர்களால் கண்டறியப்பட்டது. இதற்காக பாளையங்கோட்டை மண்டலத்்திற்கு உட்பட்ட 15 கடைகளில் ரூ.1500-ம், தச்சநல்லூர் மண்டலத்திற்குஉட்பட்ட 20 கடைகளில் ரூ.20 ஆயிரமும், நெல்லை மண்டலத்திற்குஉட்பட்ட 25 கடைகளில் ரூ.3,900-ம் அபராதம் விதித்து, அறிவுரையும் வழங்கப்பட்டது.

எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள், ஏனைய இதர கடைகளில் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது மாநகராட்சி அலுவலர்களால் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து, முழு சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடித்து அபராதம் மற்றும் மேல் நடவடிக்கையினை தவிர்த்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்