நெய்வேலியை சேர்ந்த வழிப்பறி திருடர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெய்வேலியை சேர்ந்த வழிப்பறி திருடர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2020-05-15 21:41 GMT
கடலூர்,

நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் நசீர்(வயது 37). சம்பவத்தன்று இவர் இந்திரா நகரில் உள்ள தனியார் விடுதி எதிரே நடந்து வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மேல் வடக்குத்து சடை முனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்த வீரமணி(22) என்பவர் நசீரை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக திட்டி அவரது சட்டை பையில் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்து சென்றார். இதுதொடர்பாக நசீர் கொடுத்த புகாரின் பேரில் வீரமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் கடலூர் போலீஸ் நிலையங்களில் 4 வழக்குகள் உள்ளன. வீரமணியின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வனுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின்பேரில் வீரமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த உத்தரவு குறித்து சிறையில் இருக்கும் வீரமணியிடம் போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவம்

நெய்வேலி இந்திரா நகர் கொள்ளிருப்பு காலனி அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் ஓசை மணி(40). இவர் கடந்த 28-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது இவரை வடக்குத்து சக்தி நகரை சேர்ந்த ஜெயராஜ்(40) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது நெய்வேலி டவுன்ஷிப், வடலூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் உள்ளன. ஜெயராஜின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அன்புசெல்வனுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் உத்தரவின் பேரில் ஜெயராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய தகவலை சிறையில் இருக்கும் ஜெயராஜிடம் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்