திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-16 00:34 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து எந்தவித அச்சமும் இல்லாமல் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதும், சிலர் முக கவசம் அணியாமல் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136-ல் இருந்து நேற்று 140 ஆக உயர்ந்துள்ளது. அதாவது போளூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும், முக்குரும்பை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணிற்கும், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த கண்ணகந்தல் கிராமத்தை சேர்ந்த 42 வயது பெண்ணிற்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து சென்னை வந்து உள்ளார். அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் அவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்