வாலிபரை கடத்தி கொலை செய்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கள்ளத்தொடர்பு விவகாரத்தை டிக்-டாக் மூலம் அம்பலப்படுத்திய வாலிபரை கடத்தி கொலை செய்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2020-05-18 01:43 GMT
கடலூர்,

கடலூர் முதுநகர் பகுதியில் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக இருதரப்பினரிடையே அடிதடி பிரச்சினை ஏற்பட்டது. இதை வீடியோ எடுத்து டிக்-டாக் செயலி மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தியதாக கடலூர் முதுநகர் சிவானந்தபுரத்தை சேர்ந்த ஜிங்கி ஜெய்வின் ஜோசப் (வயது 19) என்ற வாலிபரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து குடிகாடு உப்பனாற்று பகுதியில் புதைத்தது. இதுதொடர்பாக கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெரிய காரைக்காடு வள்ளுவர் தெருவைச் சேர்ந்த பிரபா என்கிற பிரபாகரன் (27), கடலூர் முதுநகர் மோகன்சிங் தெருவைச் சேர்ந்த விஜய் (21), நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆசை என்கிற மணியரசன் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார். இவர்களின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின் பேரில் பிரபாகரன் உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் சிறையில் இருக்கும் 3 பேரிடமும், சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்