காட்பாடியில் குடோனில் பதுக்கிய 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் - ரவுடி ஜானி கூட்டாளி கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஜானி கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-05-18 23:15 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். மேலும் முக்கிய ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தலைமறைவாக காணப்படும் ரவுடி ஜானி தற்போதும் வேலூர் காகிதப்பட்டறை புதுத்தெருவை சேர்ந்த தனது கூட்டாளிகளில் ஒருவரான ராஜாவுடன் (வயது 35) தொடர்பில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு காகிதப்பட்டறைக்கு சென்று ராஜாவை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை. அதைத்தொடர்ந்து போலீசார் ராஜாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில், அவருக்கு செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்பு இருப்பதும், காட்பாடி சில்க்மில் அரவிந்த்நகரில் உள்ள குடோன் ஒன்றில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரியவந்தது.

அதையடுத்து போலீசார் ராஜாவை காரில் அழைத்து சென்று அந்த குடோனில் சோதனை நடத்தினர். அங்கு சுமார் 1 டன் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது?, இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் தலைமறைவு ரவுடிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தலைமறைவாக இருக்கும் ஜானி தற்போது அவருடைய கூட்டாளிகளுடன் தொடர்பில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவரை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

ஜானி நடமாட்டம் கடந்த சில மாதங்களாக வேலூர் மாவட்டத்தில் இல்லை. தலைமறைவாக காணப்படும் அவர் செல்போன் மூலம் இங்கிருக்கும் கூட்டாளிகள் உதவியுடன் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்