படகுகள் சேதமடைவதை தவிர்க்க மண்டபம், தங்கச்சிமடத்தில் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றால் படகுகள் சேதமடைவதை தவிர்க்க தூண்டில் பாலம் அமைக்கவேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-05-19 04:49 GMT
பனைக்குளம், 

ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மத்திய மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமேசுவரம் தீவில் வீசிய சூறாவளி காரணமாக பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு மற்றும் மீன்பிடி தடைகாலம் போன்றவைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்களுக்கு இது கூடுதல் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தூண்டில் பாலம்

இப்பகுதியில் ‘டி’ வடிவ தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி தூண்டில் பாலம் அமைக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுத்திருக்கலாம். எனவே இனியும் தாமதப்படுத்தாமல் போர்க்கால அடிப்படையில் உடனடியாக ‘டி’ வடிவ தூண்டில் பாலம் மற்றும் மீன்பிடி துறைமுகங்கள் ஏற்படுத்தித்தர மத்திய-மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

மேலும் தற்போது ஏற்பட்டிருக்கும் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். படகுகளை சரி செய்ய ஆகும் முழு செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்