முடி திருத்தகம், அழகு நிலையங்களில் காய்ச்சல், சளியுடன் வருபவர்களை அனுமதிக்கக்கூடாது சுகாதாரத்துறை கமிஷனர் உத்தரவு

முடி திருத்தகம், அழகு நிலையங்களில் காய்ச்சல், சளியுடன் வருபவர்களை அனுமதிக்கக்கூடாது என்று சுகாதாரத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-05-19 21:30 GMT
பெங்களூரு, 

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கமிஷனர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

முடி திருத்தகம், அழகு நிலையங்கள், காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலியுடன் வருபவர்களை அரங்கிற்குள் அனுமதிக்கக்கூடாது. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அரங்கத்தின் நுழைவு பகுதியில் கிருமிநாசினி திரவத்தை வைத்திருக்க வேண்டும்.

ஊழியர்கள் முகக்கவசம், தலைமுடியை மூடும் கவசத்தை அனைத்து நேரமும் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் துண்டை பயன்படுத்த வேண்டும். முடி திருத்த பயன்படுத்தும் கருவிகளை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முடி திருத்திய பிறகு கிருமி நாசினியை கொண்டு அவற்றை தூய்மைபடுத்த வேண்டும்.

ஒரே மாதிரியான அதிக எண்ணிக்கையில் கருவிகளை வைத்துக்கொள்ள வேண்டும். ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் கைகளுக்கு கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் முறையை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் ஒரே நேரத்தில் அரங்கத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவது தவிர்க்க முடியும்.

இருக்கைகளை ஒரு மீட்டர் இடைவெளியை விட்டு போட வேண்டும். அரங்கத்தின் தரை பகுதியை ஒரு நாளைக்கு 2 முறை கிருமிநாசினியை கொண்டு தூய்மைபடுத்த வேண்டும். தரை விரிப்பான்களை அடிக்கடி தூய்மைபடுத்த வேண்டும். முடி திருத்தகத்தில் சேரும் கழிவுகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து, உயிரி கழிவுகளை சேகரிப்பாளரிடம் வழங்க வேண்டும். அதிலும் கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுகாதாரத்துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்