சேலத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்

சேலத்தில் இருந்து வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். அவர்களை கலெக்டர் ராமன் வழியனுப்பி வைத்தார்.

Update: 2020-05-21 02:54 GMT
சேலம்,

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு பஸ் மற்றும் ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 347 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல் சேலம் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உத்தரபிரதேச மாநிலத்தை சிறந்த 1,401 தொழிலாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் தற்போது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து இவர்கள் அனைவரையும் அவர்களது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சேலம் சூரமங்கலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திலிருந்து உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 82 குழந்தைகள் உள்பட 1,401 தொழிலாளர்கள் நேற்று இரவு சிறப்பு ரெயில் மூலம் உத்தரபிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட கலெக்டர் ராமன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சேலம் உதவி கலெக்டர் மாறன், மற்றும் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

இதேபோல் சேலம் மாவட்டத்தில் இருந்து மாநகரில் 58 பேரும், மேற்கு தாலுகாவில் 9 பேரும், வாழப்பாடி தாலுகாவில் 26 பேரும், ஆத்தூர் தாலுகாவில் 12 பேரும் என மொத்தம் 415 பேர் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு சிறப்பு ரெயில் மூலம் அவர்களது சொந்த ஊரான மராட்டிய மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு மட்டும் மராட்டிய மாநிலத்திற்கு 415 பேரும், உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு 1,401 பேரும் என மொத்தம் 1,916 தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்