ஊரடங்கில் மேலும் தளர்வு எதிரொலி: 44 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஊரக திட்டத்தில் வேலைவாய்ப்பு

ஊரடங்கில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 44 ஆயிரம் தொழிலாளர்கள் ஊரக வேலை திட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

Update: 2020-05-21 02:56 GMT
நெல்லை, 

ஊரடங்கில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 44 ஆயிரம் தொழிலாளர்கள் ஊரக வேலை திட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணியாற்றி வருகிறார்கள்.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. தொழிற்சாலைகள் மற்றும் மத்திய அரசு திட்டப்பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது.

தொழில் நிறுவனங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்கலாம், ஓட்டல்களில் பார்சல் வழங்கலாம் உள்ளிட்ட பல தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள மத்திய அரசு திட்டப்பணிகளை தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, கிராமப்புறங்களில் சாலை அமைக்கும் பணிகள், குளம், வாய்க்கால் தூர்வாருதல் போன்ற பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் தொழிலாளர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணியாற்றி வருகின்றனர்.

100 நாள் வேலை திட்டம்

நெல்லை, தென்காசி மாவட்ட கிராமப்புறங்களில் மத்திய அரசின் மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடந்து வருகின்றன. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பணிகள் நடந்து வருகின்றன. வீட்டில் முடங்கி கிடந்த தொழிலாளர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் கூறியதாவது:-

சமூக இடைவெளி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ள கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம் அமல்படுத்தப்படவில்லை. மற்ற கிராமங்களில் இந்த திட்டத்தில் வேலை கொடுக்கப்படுகிறது. அரசின் விதிப்படி 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் ஆர்வமாக வந்து வேலை செய்கிறார்கள். தற்போது குளங்கள், வாய்க்கால் தூர்வாருதல் போன்ற பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முககவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம். அதேபோல் வேலைக்கு வரும்போது, ஆட்டோ, வேன்களில் கூட்டமாக வரக்கூடாது, வேலை தொடங்கும்போது கைகளை சோப்பு ஆயில் கொண்டு கழுவ வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளோம்.

44 ஆயிரம் தொழிலாளர்கள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இத்திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 44 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஒரு நாளைக்கு ரூ.256 கூலி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு வாரந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த வேலைவாய்ப்பு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்