அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கம்; உரிய கட்டணத்தை செலுத்தி சென்றனர்

அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்வதற்காக நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் அவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி சென்று வந்தனர்.

Update: 2020-05-21 04:37 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு விதிகளின் படி இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் தாங்கள் வேலைபார்க்கும் இடங்களுக்கு சென்று வர 4 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் 50 சதவீத பணியாளர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் வேலைக்கு எளிதில் சென்று வரும் வகையில் கடலூர்- பண்ருட்டி, பண்ருட்டி- கடலூர், கடலூர்- விருத்தாசலம், விருத்தாசலம்- கடலூர், சிதம்பரம்- பண்ருட்டி, பண்ருட்டி- சிதம்பரம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் காட்டுமன்னார்கோவில், வடலூர், வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் என மாவட்டத்தில் பல்வேறு முக்கிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி நேற்று இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி தாங்கள் வேலை பார்க்கும் அரசு அலுவலகங்களுக்கு சென்று வந்தனர். 

இவ்வாறு செல்லும் போது உரிய நடைமுறைகளை பின்பற்றினர். டிரைவர்கள், கண்டக்டர்கள் கையுறை, முக கவசம் அணிந்திருந்தனர். அதேபோல் பஸ்சில் பயணம் செய்த ஊழியர்களும் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து, முக கவசம் அணிந்தபடி பயணம் மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்