உழவர் சந்தையை மீண்டும் இயக்க நடவடிக்கை; அதிகாரிகள் ஆலோசனை

ஈரோடு சம்பத்நகர் மற்றும் பெரியார் நகர் பகுதிகளில் உழவர் சந்தைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2020-05-21 05:40 GMT
ஈரோடு, 

ஈரோடு மாநகர் பகுதியில் சம்பத் நகர் மற்றும் பெரியார் நகரில் உழவர் சந்தைகள் இயங்கி வந்தன. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த 2 சந்தைகளும் அடைக்கப்பட்டன. ஆனால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 2 சந்தைகளையும் ஒரே இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம் உழவர் சந்தையாக மாற்றப்பட்டது.

இங்கு தினசரி விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் காய்கள், கீரைகள் மற்றும் அவர்கள் வளர்த்து வரும் மாடுகளில் இருந்து கறந்த பால் மற்றும் பால் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். தொடக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்தனர். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல பொதுமக்கள் வருகை குறைந்தது. இதுபோல் விவசாயிகள் வந்து செல்ல பஸ் வசதி இல்லாததால் விவசாயிகளும் வரவில்லை.

எனவே மீண்டும் சந்தைகளை பெரியார் நகர், சம்பத் நபர் பகுதிகளில் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் இருந்து உழவர் சந்தை பழைய இடத்துக்கே இடம் மாற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பெரியார் நகர் உழவர் சந்தையை தூய்மைப்படுத்தி, விவசாயிகள் உட்கார்ந்து வியாபாரம் செய்யும் பகுதி, பொதுமக்கள் வந்தால் பொது இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அடையாளங்கள் போடும் பணி செய்யப்பட்டது.

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தை அதிக விவசாயிகள் மற்றும் அதிக பொதுமக்கள் கூடும் சந்தையாகும். இங்கு சராசரியாக தினமும் 140 விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வருவார்கள். இதுபோல் பெரியார் நகர் உழவர் சந்தைக்கும் சராசரியாக 30 விவசாயிகள் வருவார்கள். விழாக்காலங்களில் 2 சந்தைகளையும் சேர்த்து சுமார் 200 விவசாயிகள் வருவார்கள்.

இது பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தரமாகவும், நேரடியாகவும் வாங்கும் வாய்ப்பை வழங்கி வந்தது. கொரோனா பதற்றம் தொடங்கியபோது விவசாயிகள் வருகை குறைந்தது. பெரும்பாலான விவசாயிகள் வயதானவர்களாக இருந்ததால் அவர்கள் சந்தைக்கு வருவதை தவிர்த்தனர். அதுமட்டுமின்றி பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டதும், சற்று தொலைவில் இருந்து வரும் விவசாயிகள் வர முடியவில்லை.

இந்தநிலையில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் சந்தை மாற்றம் செய்யப்பட்டபோது 100-க்கும் குறைவான விவசாயிகளே வந்தனர். தற்போது இது மிகவும் குறைந்து உள்ளது. தினமும் 50 முதல் 60 விவசாயிகளே வருகிறார்கள். பொதுமக்கள் வருகையும் குறைந்து விட்டது. மேலும் பள்ளிக்கூடத்தில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மீண்டும் சந்தையை சம்பத்நகர், பெரியார் நகர் பகுதிகளுக்கே மாற்றுவது என்று தீர்மானிக்கப்பட்டது. 21-ந் தேதி (இன்று) மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே சந்தைகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டன. தற்போது இந்த தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த மாத இறுதிக்குள் உழவர் சந்தை பழைய இடத்துக்கு மாற்றம் செய்யப்படும். இது குறித்து மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் வேளாண்மைத்துறை துணை இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். உரிய முடிவு எடுக்கப்பட்டவுடன், உழவர் சந்தை இடமாற்றம் தேதி எப்போது என்று அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்