சென்னையில் 135 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் 135 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Update: 2020-05-22 00:00 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே போகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் மிக பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா எளிதில் பாதிக்கக்கூடிய நபர்களாக குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், புற்றுநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் உள்ளவர்களை சுகாதாரத்துறை வகைப் படுத்தி உள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 800-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளும் அடங்கும். மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1085 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் 135 கர்ப்பிணி பெண்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரசால் கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் 48 பேரும், எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 34 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் 23 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 பேரும் என சென்னை முழுவதும் 135 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 135 கர்ப்பிணி பெண்களும் தனிமைப்படுத்தப்பட்டு, தமிழக அரசு அமைத்த கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ குழுவின் ஆலோசனைபடி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கு தாம்பரம் சி.டி.ஓ. காலனியைச் சேர்ந்த 33 வயதான பெண் டாக்டர், தாம்பரம் கடப்பேரி பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண் டாக்டர், தாம்பரம் ராமநாதபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த பெண் ஊழியர் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இவர்கள் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 655 ஆனது. இவர்களில் 233 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்