தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மெக்கானிக் கைது

தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-21 23:16 GMT
மன்னார்குடி, 

தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.

மெக்கானிக்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி டெப்போ ரோடு பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது32). ஆட்டோ மெக்கானிக். இவர் நேற்று மாலை 5 மணி அளவில் மன்னார்குடி நடு வானிய தெருவில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மன்னார்குடி போலீசார் அங்கு விரைந்து சென்று சதீஷிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மது விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி ஒருவர் தன்னை தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாரிடம், சதீஷ் முறையிட்டார்.

கைது

இதையடுத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சதீஷை சமாதானம் செய்தனர். ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் சதீஷ் கீழே இறங்குவதற்கு சம்மதித்தார். இதையடுத்து கீழே இறங்கி வந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் செல்போன் கோபுரத்தில் ஏறி ஆட்டோ மெக்கானிக் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்