ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் குமரி கலெக்டர் அலுவலகத்தில், டிரைவர்கள் மனு

குமரி மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கேட்டு ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2020-05-22 01:24 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கேட்டு ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மனு

குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்க (சி.ஐ.டி.யு) மாவட்ட தலைவர் மரிய ஸ்டீபன், மாவட்ட செயலாளர் பொன்.சோபனராஜ், பொருளாளர் மோகன், துணைத்தலைவர் அந்தோணி, கவுரவ தலைவர் சிவகோபன், மோட்டார் சங்க செயலாளர் பிரேமானந்த், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகன் மற்றும் ஏராளமானோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நிவாரணம்

தமிழகத்தில் 4-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடுமையான வறுமையையும், நெருக்கடியையும் ஆட்டோ டிரைவர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் எங்கள் ஆட்டோ சம்மேளனம் சார்பில் அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் கேட்டும், 17-ந் தேதிக்கு பிறகு சமூக இடைவெளியை கடைபிடித்து ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் எனக்கேட்டும் கடந்த 16-ந் தேதி அன்று முதல்-அமைச்சருக்கு இ-மெயில் மூலம் மனுக்கள் அனுப்பப்பட்டது.

ஆனால் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவில்லை. முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் இல்லாதவர்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். இதைப்போல பாதிப்பில் இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஆட்டோ இயக்க அனுமதி

நலவாரியத்தில் வழங்கப்பட்டுள்ள நிவாரணமும், நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்காத நிலைதான் உள்ளது. 4-வது கட்ட ஊரடங்கில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு தளர்வு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஆட்டோக்கள் இயக்க அனுமதியும் வழங்கப்படவில்லை. நிவாரணமும் வழங்கப்படவில்லை. இது ஆட்டோ தொழிலாளர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளது.

எனவே சமூக இடைவெளியோடு ஆட்டோக்கள் இயக்க அனுமதி தருவதோடு, ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்தின் நலன் கருதி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிவாரண பொருட்கள்

இதற்கிடையே தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளருக்கு குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்க (சி.ஐ.டி.யு.) செயலாளர் பொன்.சோபனராஜ் அனுப்பியுள்ள மனுவில், நலவாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் முழுமையாக வழங்கப்படவில்லை. எனவே விடுபட்ட தொழிலாளர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்