ஆப்கானிஸ்தானில் இருந்து வரவழைத்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 கோடி போதை பொருட்கள் பறிமுதல் தொண்டியில் 9 பேர் அதிரடி கைது

ஆப்கானிஸ்தானில் இருந்து வரவழைத்து தொண்டியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 கோடி போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2020-05-22 05:56 GMT
தொண்டி, 

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரின் பிரத்யேக செல்போன் எண்ணுக்கு ரகசிய தகவல் வந்தது. அவரின் உத்தரவின்பேரில் திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தொண்டி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஒரு கும்பல் தொண்டியை சேர்ந்த ஒருவரின் படகு மூலம் போதை பொருட்களை இலங்கைக்கு கடத்த தயாராக இருந்தனர். இதை அறிந்து அங்கு மறைந்திருந்த போலீசார் அந்த கடத்தல் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து ஹெராயின் உள்ளிட்ட விலை உயர்ந்த பலரக போதை பொருட்களையும், போதை மாத்திரைகளையும், 1½ டன் செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் ரூ.2 லட்சம் பணம், செல்போன்கள், ஒரு கார், ஆட்டோ, மொபட் ஆகிய வாகனங்களும், போதைப்பொருட்களை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்பட்ட எடை மிஷின் உள்ளிட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்த இருந்த போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது.

9 பேர் கைது

இந்த கடத்தல் முயற்சி தொடர்பாக அப்துல்ரஹீம் (வயது 49), அபுல்கலாம்ஆசாத் (23), அருள்தாஸ் (43), சுரேஷ்குமார் (44), அஜ்மல்கான் (48), அஜ்மீர்கான் (42), முத்துராஜா (38), கேசவன் (42), அப்துல்வகாப் (36) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து அந்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் சிறப்புப்படை போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பலை சேர்ந்த பலர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான்

இந்த கும்பல் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை பொருட்களை ஒன்று சேர்த்து தொண்டியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்லவும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு அவற்றை கொண்டு செல்லவும் திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்