விருகம்பாக்கத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

விருகம்பாக்கத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2020-05-22 23:00 GMT
பூந்தமல்லி, 

சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். குடியிருப்பு வளாகத்தின் அருகே உள்ள காலி இடத்தில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து உள்ளனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், கொலையான வாலிபர் யார்? என விசாரித்தனர்.

விசாரணையில் அவர், வடபழனி குமரன் காலனியைச் சேர்ந்த ரமேஷ்(வயது 25) என்பதும், இவர் பல்வேறு கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், கடந்த மாதம் ரமேஷ், தனது கூட்டாளியான அஜித்தை செம்மஞ்சேரியில் உள்ள ஏரியில் குளிக்க அழைத்துச் சென்றார். ஏரியில் குளிக்கும்போது அஜித் நீரில் மூழ்கி பலியானார். அஜித்தின் அண்ணனான தேவா என்பவர், தனது தம்பி அஜித் சாவுக்கு முக்கிய காரணம் ரமேஷ்தான் என நினைத்து, அவரை தீர்த்துக்கட்ட கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.அதன்படி நேற்று முன்தினம் இரவு ரமேசை அங்கு அழைத்து வந்து மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் ரமேசை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு அனைவரும் தப்பி ஓடிவிட்டதாக கைதான விஜயிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எனினும் அவரது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கோழி பாபு(20), கொரிலா என்ற சஞ்சய்(20), மாவாட்டி என்ற மணிகண்டன்(19), அலார்ட் ஆறுமுகம்(19), மற்றொரு விஜய்(20) ஆகிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்