புனேயில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ பொருட்கள் எரிந்து நாசம்

புனேயில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.

Update: 2020-05-22 23:00 GMT
மும்பை,

புனே குர்கும்ப் எம்.ஐ.டி.சி. பகுதியில் குசும் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து நேற்று காலை திடீரென குபுகுபுவென கரும்புகை வெளியேறியது.

அடுத்த சில நொடிகளில் தொழிற்சாலை பயங்கரமாக தீ பிடித்து எரிந்தது. பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் பதறி போய் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர்.

தொழிற்சாலையில் தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு படை மற்றும் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ரசாயன ஆலையின் நாலாபுறமும் சுற்றி நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த ரசாயனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின. தொழிற்சாலைக்குள் யாரும் சிக்கியிருக்கிறார்களா? என தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொழிற்சாலையில் இருந்த அசிட்டான் மற்றும் எத்தனால் பேரல்கள் தீப்பிடித்து எரிந்து வெடித்ததாகவும், தீ விபத்தின் போது தொழிற்சாலை மூடப்பட்டு இருந்ததால், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்