தானாகவே குணம் அடைகிறார்கள் கொரோனா பாதித்த 95 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறியே இல்லை மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் தகவல்

கர்நாடகத்தில் கொரோனா பாதித்த 95 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறியே இல்லை என்றும், அவர்கள் தானாகவே குணமடைந்து வருவதாகவும் மருத்துவ கல்வி மந்திரி சுதாகர் கூறினார்.

Update: 2020-05-23 22:30 GMT
பெங்களூரு,

கர்நாடக மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கன்னடர்கள் அதிக எண்ணிக்கையில் கர்நாடகத்திற்கு திரும்பி வருவது தான் முக்கிய காரணம். நமது மாநிலத்தை சேர்ந்தவர்களை, இங்கு வர வேண்டாம் என்று மனிதநேயமற்ற முறையில் கூற முடியாது. ஆனால் அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுகிறார்கள். இது சரியல்ல. கொரோனா தடுப்பு விஷயத்தில் அரசு பிறப்பிக்கும் வழிகாட்டுதலை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மக்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ, அதை மத்திய-மாநில அரசுகள் செய்துள்ளன. இனி மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை சமூக விலகலை பின்பற்றுவது, தூய்மையை பராமரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். சோப்பு போட்டு கைகளை கழுவுவது, சானிடைசர் திரவத்தை பயன்படுத்தி கைகளை தூய்மைபடுத்துவது போன்றவற்றை அடிக்கடி செய்ய வேண்டும். பொதுமக்கள் தற்போதைக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே நடமாட அனுமதிக்கக்கூடாது.

அத்துடன் அவ்வப்போது அரசு பிறப்பிக்கும் வழிகாட்டுதலை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். கொரோனா பாதித்தவர்களில் 95 சதவீதம் பேருக்கு அதற்கான அறிகுறியே இல்லை. அதனால் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம். மீதம் இருப்பவர்கள் தானாகவே குணம் அடைகிறார்கள். 2 முதல் 3 சதவீதம் பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவு வரை செல்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு ஏற்கனவே உள்ள வேறு சில நோய்கள் காரணம் ஆகும்.

தேசிய அளவில் மரண விகிதம் 4 சதவீதமாக உள்ளது. நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த தரமான சிகிச்சையை நோயாளிகளுக்கு அளிக்கிறோம். அதனால் தான் அதிகளவில் குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். அதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட தேவை இல்லை. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டியம், தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் கர்நாடகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நாங்கள் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். சில குழப்பங்களால் இன்று (நேற்று) அந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பெங்களூருவில் கூடிவிட்டனர். அந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இதனால் எந்த பயனும் இல்லை. மக்கள் மீது காங்கிரசுக்கு அக்கறை இருந்தால், கர்நாடகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கட்டும்.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்