கொரோனா தொற்றால் பாதிப்பு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்ற ஊழியர் விசாரணை நடத்த மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஊழியர் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்று சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் குறித்து மாநகராட்சி கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2020-05-23 23:45 GMT
தானே,

தானேயை சேர்ந்த நபர் ஒருவர் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அண்மையில் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்தார். இதையடுத்து டோம்பிவிலி சாஸ்திரி நகர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள ஆம்புலன்சை வரவழைக்க தொடர்பு கொண்டார்.

ஆனால் ஆம்புலன்சு அவரை அழைத்து செல்ல வரவில்லை. வெகு நேரமாக காத்திருந்த அந்த நபர் வேறு வழியின்றி அங்கிருந்து 7 கி.மீ தூரம் உள்ள ஆஸ்பத்திரிக்கு நடந்து சென்றார். பின்னர் அங்கு அனுமதிக்கப்பட்டு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இவர் நடந்து செல்லும் போது எடுத்த வீடியோவில் தான் ஆஸ்பத்திரி ஊழியராக இருந்தும் எனது சிகிச்சைக்காக ஆம்புலன்சு கிடைக்காததால் தானே ஆஸ்பத்திரிக்கு நடந்து செல்வதாக கூறி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இந்த வீடியோ பற்றி அறிந்த மாநகராட்சி கமிஷனர் விஜய் சூரியவன்சி கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஆஸ்பத்திரி ஊழியருக்கு ஆம்புலன்சு வராமல் போன காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.மேலும் அவர் தெரிவிக்கையில், “நடந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதே போல மற்றொரு புகார் வராமல் இருக்க ஊழியர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளேன்” என்றார்.


மேலும் செய்திகள்