திண்டுக்கல்லில் நெரிசலை தவிர்க்க 5 இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த வசதி

திண்டுக்கல்லில் நெரிசலை தவிர்க்க 5 இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-23 23:43 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் நெரிசலை தவிர்க்க 5 இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் நெரிசல்

ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், திண்டுக்கல் நகரில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு விட்டன. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு தினமும் கடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் மேற்கு ரதவீதி, கடைவீதிகளில் சிறு வணிகர்கள் பொருட்களை வாங்குவதற்கு மொத்த விற்பனை கடைகளுக்கு வருகின்றனர்.

இதனால் கடைவீதி, ரதவீதிகள், மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தினமும் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அது கொரோனா பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். எனவே, நெரிசலை குறைக்கும் வகையில் திண்டுக்கல் நகரில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

5 இடங்கள் ஒதுக்கீடு

இதில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய இருசக்கர வாகனங்களை கடைகளின் முன்பு நிறுத்தக் கூடாது. அவ்வாறு நிறுத்தினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும். மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, டட்லி மேல்நிலைப்பள்ளி, நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, காந்தி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் மைதானங்கள் மற்றும் தொந்தியா பிள்ளை தெரு ஆகிய 5 இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

இதை கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரை கொண்ட 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதேபோல் திண்டுக்கல் கல்லறைமேடு சந்திப்பு முதல் வாணிவிலாஸ் சிக்னல் வரையுள்ள பழனி சாலையில் ஒருபக்கம் வாகனங்களை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் கடைகளின் முன்பு வாகனங்களை நிறுத்துவது தடுக்கப்படுவதோடு, நெரிசலும் குறையும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்