கரூர் மாவட்டத்தில் 50 சதவீதம் ஆட்டோக்கள் ஓடின

கரூர் மாவட்டத்தில் 50 சதவீதம் ஆட்டோக்கள் ஓடின.

Update: 2020-05-24 05:34 GMT
கரூர், 

கரூர் மாவட்டத்தில் 50 சதவீதம் ஆட்டோக்கள் ஓடின.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது. அதனை தொடர்ந்து சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, தமிழகத்தில் நேற்று முதல் ஆட்டோக்கள் ஓட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

ஆட்டோவில் டிரைவர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயக்க அனுமதி வழங்கியிருந்தது. மேலும் ஆட்டோ டிரைவரும், ஆட்டோவில் பயணம் செய்யும் பயணியும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்றும், மேலும் ஆட்டோவில் கிருமி நாசினி (சானிடைசர்) வைத்திருக்க வேண்டும், தினமும் 3 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், ஆட்டோ டிரைவர் அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது.

50 சதவீதம் ஆட்டோக்கள் ஓடின

இந்தநிலையில் கரூர், தாந்தோணிமலை, வெங்கமேடு, காந்திகிராமம், பசுபதிபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் ஆட்டோக்கள் ஓட தொடங்கின. ஆட்டோ டிரைவர்கள் முககவசம் அணிந்திருந்தனர். மேலும் ஆட்டோவில் டிரைவர்கள் கிருமி நாசினி வைத்திருந்தனர். ஆட்டோவில் ஏறும் பயணிக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கினர். பெரும்பாலான ஆட்டோ நிறுத்தத்தில் பயணிகளின் வருகைக்காக ஆட்டோ டிரைவர்கள் காத்து கொண்டிருந்தனர்.

இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், கடந்த 55 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கால் ஆட்டோக்கள் ஓட்ட அனுமதி இல்லை. இதனால் வருமானம் இன்றி தவித்து வந்தோம். தற்போது ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்து உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், பெரும்பாலான நகைக்கடைகள், தனி கடைகள் திறக்காததால் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவில் உள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் 50 சதவீதம் ஆட்டோக்கள் மட்டும் ஓடியது என்றனர்.

மேலும் செய்திகள்