பெங்களூருவில் இருந்து உத்தரபிரதேசம் சென்ற தொழிலாளியின் மனைவிக்கு ஓடும் ரெயிலில் பிரசவம் பெண் குழந்தை பிறந்தது

பெங்களூருவில் இருந்து உத்தரபிரதேசம் சென்ற தொழிலாளியின் மனைவிக்கு ஓடும் ரெயிலில் பிரசவம் நடந்தது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

Update: 2020-05-24 22:15 GMT
பெங்களூரு,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் சிக்கியுள்ள வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் பெங்களூருவில் இருந்து ஒரு சிறப்பு ரெயில் தொழிலாளர்களுடன் உத்தரபிரதேசத்திற்கு புறப்பட்டது.

அந்த ரெயில் மத்தியப்பிரதேசம் மாநிலம் பினா நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயிலில் பயணம் செய்த கட்டுமான தொழிலாளி சந்தீப் என்பவரின் நிறைமாத கர்ப்பிணி மனைவியான சங்கீதா பிரசவ வலியால் துடித்தார். உடனே உடன் இருந்த சக பெண்கள், சங்கீதாவுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். ரெயில் பெட்டியில் சுற்றிலும் துணியால் மறைக்கும் திரையை ஏற்படுத்தி அரண் போல் செய்தனர்.

பிறகு உடன் இருந்த பெண்கள், தங்களுக்கு உள்ள அனுபவத்தை வைத்து சங்கீதாவுக்கு பிரசவம் பார்த்தனர். ஓடும் ரெயிலில் அந்த சங்கீதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பினா ரெயில் நிலையத்தில் தயாராக இருந்த டாக்டர்கள், சங்கீதாவையும், அவருடைய குழந்தையையும் சோதனை செய்து பார்த்தனர். தாயும்-சேயும் நலமாக இருப்பதாகவும், அவர்கள் ரெயிலில் சொந்த ஊர் வரை பயணம் செய்ய முடியும் என்று கூறினர். இதையடுத்து அதே ரெயிலில் அந்த தாயும்-சேயும் உத்தரபிரதேசத்திற்கு சென்றனர்.

இதற்கிடையே செல்லும் வழியிலேயே இந்த பிரசவம் குறித்த தகவலை, சங்கீதாவின் கணவர் சந்தீப், பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த துணை கமிஷனர் எம்.என்.அனுசேத்து மற்றும் வன அதிகாரி தீபிகா பஜ்பய் ஆகியோருக்கு தெரிவித்தார். அவர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள தங்களுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு இதுபற்றிய தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ ரெயில் நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர்களை அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயும்-சேயும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர் கூறுகையில், “அந்த பெண் நிறைமாத கர்ப்பிணி என்று எங்களுக்கு தெரியாது. அவருடன் இருந்த உறவினர்களும் இதுபற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அந்த பெண் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். பிரசவத்திற்கு உள்ளான தாயும்-சேயும் நலமாக இருக்கிறார்கள் என்றார்.

கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட், ஓடும் ரெயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்