17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த பீகார் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் 17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-05-24 21:50 GMT
திருப்பூர், 

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் எஸ்.ரஞ்சித் மண்டேல் (வயது 24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் வந்த இவர் கணக்கம்பாளையம் வாசிங்டன் நகர் பகுதியில் தங்கி, அங்குள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் 15 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்தார்.

சிறுமி கர்ப்பமாக இருந்த சூழலில் சில நாட்களுக்கு முன் அவரை தவிக்க விட்டு விட்டு ரஞ்சித் மண்டேல் தலைமறைவானார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு தானாக சென்று சிகிச்சைக்கு சேர்ந்த அந்த சிறுமிக்கு மறுநாள் ஆண் குழந்தை பிறந்தது.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த வாலிபர் ரஞ்சித் மண்டேலை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். சிறுமி அவருடைய குழந்தையுடன் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்