பாகூர் பகுதியில் கடலூரை சேர்ந்தவர்கள் நுழைய தடை

பாகூர் பகுதியில் கடலூரை சேர்ந்தவர்கள் நுழைவதை தடை செய்வதற்காக சோரியாங்குப்பம் ஆற்றங்கரையில் போலீசார் பள்ளம் தோண்டி பாதையை துண்டித்தனர்.

Update: 2020-05-24 23:44 GMT
பாகூர்,

புதுவையை விட அருகில் உள்ள தமிழக பகுதியான கடலூர், விழுப்புரத்தில் தான் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. கடந்த 4 நாட்களாக புதுவையில் வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஆட்சியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் புதுவை மாநில 4 எல்லைகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணிநேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கடலூர் பகுதியை சேர்ந்தவர்கள் புதுவைக்கு வரவேண்டும் என்றால் மாநில எல்லையான முள்ளோடையை கடந்து தான் வரவேண்டும். தற்போது அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் குறுக்கு வழியான பாகூர் கிராமம் வழியாக புதுவைக்கு அவர்கள் வந்து செல்கிறார்கள்.

இதை அறிந்த பாகூர் போலீசார் சோரியாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் தடுப்பு வேலி அமைத்தனர். ஆனால் கடலூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆற்றை கடந்து விவசாய நிலத்தின் வழியாக புதிய பாதையை உருவாக்கி பாகூர் பகுதிக்கு வந்து சென்றனர். மேலும் மணல் திருட்டு நடப்பதாகவும் புகார் எழுந்தது.

இதனையடுத்து பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கடலூர் பகுதியை சேர்ந்தவர்கள் வருவதை முற்றிலும் தடுக்கும் வகையில் சோரியாங்குப்பம் மற்றும் சுடுகாடு அருகில் உள்ள ஆற்றங்கரையோர பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி பாதையை துண்டித்தனர்.

கடந்த 60 நாட்களாக சோரியாங்குப்பம் சாலை மூடப்பட்டுள்ளதால் பாகூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்