தனியார் மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரியில் தனியார் மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-25 01:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பூங்காவனத்தம்மன் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 24). இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 21-ந் தேதி வீடு திரும்பினார். இதன் பிறகு மீண்டும் அவருக்கு உடல் நிலையில் பிரச்சினை ஏற்பட்டதால் மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயராமன் இறந்தார். இதனால் ஜெயராமனின் உறவினர்கள் விஜி (23), செல்வராஜ் (39), ரமேஷ் (25), தோத்திபாறை முத்து (27) உள்ளிட்டோர் மருத்துவமனையில் இருந்த நர்ஸ் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை தாக்கினார்கள். மேலும் மருத்துவமனையில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினார்கள்.

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சவுந்தரராஜன் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஊழியர்களை தாக்கி மருத்துவமனையை சேதப்படுத்திய விஜி, ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் தலைமறைவான செல்வராஜ், முத்து ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்.

இவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், தமிழ்நாடு மருத்துவ சேவை நபர் மற்றும் மருத்துவ நிறுவனம் (வன்முறை தடுப்பு மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்