சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லிம் பெண்களுக்கு நலத்திட்ட உதவி

சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லிம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

Update: 2020-05-25 01:35 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் முஸ்லிம் பெண்கள், உதவும் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் முஸ்லிம் பெண்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.71 ஆயிரமும், 5 பேருக்கு கல்வி மருத்துவ உதவித்தொகையாக ரூ.59 ஆயிரமும் வழங்கினார். இதே போன்று 13 பேருக்கு சிறுதொழில் தொடங்கி ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் என மொத்தம் 23 பேருக்கு ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை முஸ்லிம் பெண்கள் வாங்கி சிறிய அளவில் வியாபாரம் செய்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் அங்கத்தினர்கள் ஆதரவற்ற, ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு இது போன்ற கடன் உதவிகளை பெற்றுத் தர வேண்டும். இது போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசிற்கு முஸ்லிம் சமுதாய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையின நல அலுவலர் அய்யப்பன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க இணை செயலாளர் இலியாஸ், மாவட்ட முத்த வல்லிகள் சங்க தலைவர் ஜப்பார், சங்க உறுப்பினர்கள் சபீர், இதயத்துல்லா, ஆயிஷா, ஜாஸ்மின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்