ஓய்வுபெற்ற தபால்காரர் குத்திக்கொலை; மகன் கைது

சேலத்தில் சொத்து தகராறில் ஓய்வுபெற்ற தபால்காரரை அவரது மகனே இரும்பு கம்பியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:

Update: 2020-05-25 02:54 GMT
சூரமங்கலம்,

சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் நேரு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 75), ஓய்வு பெற்ற தபால்காரர். இவருக்கு அன்புமணி (45) என்ற மகனும், தேவபிரியா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. கிருஷ்ணன் தனது மகன் அன்புமணியுடன் வசித்து வந்தார்.

திருவாக்கவுண்டனூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் அன்புமணிக்கு தனம் என்ற மனைவியும், சங்கீதா (17) என்ற மகளும், கவுதம் (14) என்ற மகனும் உள்ளனர். ஓய்வு பெற்ற தபால்காரர் கிருஷ்ணனுக்கு 6 ஆயிரம் சதுர அடியில் சொந்த வீடு மற்றும் காலி நிலமும் உள்ளது. சொத்து பிரச்சினை காரணமாக கிருஷ்ணனுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை ஆட்டோ டிரைவர் அன்புமணி அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடைக்கு சென்று மது அருந்தி உள்ளார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து அவர் தனது தந்தை யிடம் சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தனக்கு சொந்தமான 6 ஆயிரம் சதுரடி வீடு மற்றும் காலி நிலம் சொத்தை அறக்கட்டளைக்கு எழுதி வைக்க முடிவு செய்திருப்பதாகவும், எக்காரணத்தை கொண்டும் உனக்கு சொத்தை எழுதி வைக்க முடியாது என்றும் கிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் அன்புமணி, தனது தந்தை என்று கூட பாராமல் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மார்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயம் அடைந்த தபால்காரர் கிருஷ்ணன் அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையுண்ட கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொலை செய்த ஆட்டோ டிரைவரான அன்புமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்