புத்தாடை அணிந்து முஸ்லிம்கள் வீட்டிலேயே ரம்ஜான் பண்டிகை கொண்டாடினர்

ஊரடங்கால் வழிபாட்டு தலங்களில் விழாக்கள் கொண்டாட மத்திய அரசு தடைவிதித்ததால் முஸ்லிம்கள் வீடுகளிலேயே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி தொழுகை நடத்தினர்.

Update: 2020-05-25 23:45 GMT
திருவண்ணாமலை,

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் 30 நாட்கள் நோன்பு கடைபிடிப்பர். ரம்ஜான் பண்டிகையன்று திருவண்ணாமலையில் முஸ்லிம்கள் மணலூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திலும், அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடத்துவர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஒன்றாக இணைந்து தொழுகை செய்வார்கள்.

நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமல்படுத்தி வருகிறது. இதனால் திருவண்ணாமலை ஈத்கா மைதானத்தில் முஸ்லிம் மக்கள் சிறப்பு தொழுகை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்காரணமாக முஸ்லிம்கள் நேற்று புத்தாடை அணிந்து தங்கள் வீட்டிலேயே சிறப்பு தொழுகை செய்தனர். மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவர்கள் தங்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை வணங்கியவாறு தெரிவித்து கொண்டனர். தங்களுக்குள் இனிப்புகள் வழங்கியும் பரிமாறி கொண்டனர். திருவண்ணாமலை, ஆரணி, கண்ணமங்கலம், போளூர், செங்கம், கலசபாக்கம், வேட்டவலம், சேத்துப்பட்டு, பெரணமல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்கள் வீடுகளிலேயே ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். சிறுவர், சிறுமிகள் உள்பட அனைவரும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழத்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

போளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 1,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், மசூதிகள் மூடப்பட்டு உள்ளன. எனவே, முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் சமூக விலகலை கடைப்பிடித்து ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்