மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முயற்சிப்பதா? - ஆளும் கூட்டணி கட்சிகள் கண்டனம்

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதாவுக்கு ஆளும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

Update: 2020-05-26 23:30 GMT
மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் ெகாரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. இங்கு வேகமாக பரவும் தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் பாரதீய ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர் நாராயண் ரானே ராஜ்பவன் சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு தவறி விட்டதாகவும், எனவே மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனால் கொரோனாவுக்கு மத்தியில் மராட்டியத்தில் அரசியல் விவகாரம் சூடுபிடித்தது.

இந்த பிரச்சினை குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இவர்களின் இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. அவர்கள் நடத்திய ஆலோசனை விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாரதீய ஜனதா முயற்சிப்பதாக கூறி அந்த கட்சிக்கு ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இதுபற்றி சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

மராட்டியத்தில் எதிர்க்கட்சி (பாரதீய ஜனதா) தனிமைப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கத்தை கவிழ்க்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியை தழுவும். அதற்கான சூத்திரத்தை இன்னும் எதிர்க்கட்சி கண்டுபிடிக்கவில்லை. மராட்டியத்துடன் ஒப்பிடும் போது, குஜராத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மிக மோசமாக உள்ளது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டுமானால் முதலில் குஜராத்தில் தான் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் கூறுகையில், “மராட்டியத்தை சேர்ந்த பாரதீய ஜனதா தலைவர்கள் அதிகார பேராசை கொண்டவர்கள். தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு உதவுவது பற்றி அவர்களால் சிந்திக்க முடியாது. அவர்கள் அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் இந்த அரசு நிலையானது. முறையாக செயல்படுகிறது” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான நவாப் மாலிக் கூறுகையில், “இந்த அரசாங்கம் வலுவானது. மகா விகாஷ் கூட்டணிக்கு போதுமான ஆதரவு உள்ளது. 3 கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. ஆனால் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் தான் இந்த அரசு கவிழ்ந்து விடும், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று வதந்தியை பரப்புகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மராட்டிய அரசு கடைப்பிடித்து வருகிறது. இங்கு தான் நாட்டிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது” என்றார்.

மேலும் செய்திகள்