ஊரடங்கு நீட்டிப்பால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும்; நாராயணசாமி எச்சரிக்கை

ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2020-05-27 00:00 GMT
புதுச்சேரி,

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பஸ், ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதுடன் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் 31-ந்தேதி வரை 4-வது கட்டமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இன்னும் 4 நாட்களில் இதற்கான கெடு முடிய உள்ள நிலையில் மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரிக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாகி உள்ளது. எனவே அத்தகையவர்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் புதுச்சேரி மற்றும் மாகி பகுதிகள் ஆரஞ்சு மண்டலமாகவும், காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகள் பச்சை மண்டலமாகவும் உள்ளன.

ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு இதுவரை எந்த வழிகாட்டுதலும் தெரிவிக்கவில்லை.

அதற்குபின் மத்திய அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை. மக்களை காக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பது தொடர்பாக வல்லுனர்களுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை தரவில்லை. வெண்டிலேட்டர், மனிதர்களுக்கான முகக் கவசங்கள், மருந்து வகைகள் போன்றவற்றையும் வழங்கவில்லை. புதுவை மாநிலத்திற்கு தேவையான நிதியை தருமாறு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் எதுவும் வளர்ச்சிக்குப் பயன்படாது. பொருளாதாரம் மேம்பட மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி தர வேண்டும். அதை செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. விவசாயிகளுக்கு சலுகை கொடுப்பதாக அவர் கூறினார். ஆனால் அவர்கள் வங்கிகள் மூலம் கடன் கொடுக்கிறார்கள். இது சலுகை அல்ல. நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 13 கோடி மக்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். மாநில அரசுகளுக்கு நிதி தந்தால் தான் வளர்ச்சி ஏற்படும். இது தொடர்பாக சோனியாகாந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்