கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திடீர் ஆலோசனை

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-05-28 00:00 GMT
மும்பை,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மராட்டியம் முன்னணியில் உள்ளது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த 4-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இதற்கிடையே கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாரதீய ஜனதாவினர் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து முறையிட்டனர்.

அக்கட்சியை சேர்ந்த நாராயண் ரானே மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்கும்படி கவர்னரை சந்தித்து வலியுறுத்தினார்.

இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா முயற்சிப்பதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த கூட்டணி அரசுக்கு போதிய பலம் இருப்பதாகவும் தெரிவித்தன.

சூடுபிடித்த அரசியல் களம்

இதனால் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மராட்டிய அரசியல் களமும் சூடுபிடித்தது.

இந்தநிலையில், நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூட்டணி கட்சி தலைவர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரிகளான காங்கிரசை சேர்ந்த பாலசாகேப் தோரட், தேசியவாத காங்கிரசை சேர்ந்த ஜெயந்த் பாட்டீல், சிவசேனாவின் அனில் பரப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு விவகாரம் மற்றும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாரதீய ஜனதா கவர்னரை வலியுறுத்திய பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் செய்திகள்