சொத்து விற்பனை பத்திர பதிவு விதிமுறையில் தற்காலிக மாற்றம் அரசு உத்தரவு

சொத்து விற்பனை பத்திரபதிவு விதிமுறையில் தற்காலிக மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-06-01 00:57 GMT
விருதுநகர், 

சொத்து விற்பனை பத்திரப்பதிவில் பொது அதிகார முகவர்கள் பதிவதற்கான விதிமுறையில் தற்காலிக மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் முழு அளவு பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன. இதில் பொது அதிகார முகவர்கள் சொத்து விற்பனை பத்திரம் பதிவதில் நடைமுறை பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. தற்போது உள்ள நிலையில் சொத்து உரிமையாளர் உயிருடன் இருப்பதற்கான அசல் மருத்துவ சான்றிதழை பத்திரப்பதிவின்போது தாக்கல் செய்ய வேண்டும்.

பொது முகவர்கள் உரிமையாளர்களின் அசல் மருத்துவ சான்றிதழ் பெறுவதில் பிரச்சினைகள் உள்ளதால் இந்த விதிமுறை தளர்த்தப்படுகிறது. அதற்கு பதிலாக சொத்து உரிமையாளர் உயிருடன் இருப்பதற்கான மருத்துவ சான்றிதழை சார்பதிவாளருக்கு இ-மெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம். இதை அடிப்படையாக கொண்டு சார்பதிவாளர்கள் சொத்து விற்பனையை பதிவு செய்து கொள்ளலாம்.

காலக்கெடு

இந்த விதிமுறை மாற்றம் தற்காலிகமானது மட்டுமே. மாற்றப்பட்ட இந்த நடைமுறை ஜுலை மாதம் 31-ந்தேதி வரை மட்டும் அமலில் இருக்கும். இதற்கு ஏற்ப பத்திரப்பதிவுத்துறை தலைவர், பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு உரிய நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்