இலங்கையில் தவித்தபோது இந்திய கடற்படை கப்பல் மீட்டது மட்டற்ற மகிழ்ச்சி சொந்த ஊருக்கு திரும்பிய பயணிகள் உற்சாகம்

இலங்கையில் தவித்தபோது, இந்திய கடற்படை கப்பல் மீட்டது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என்று கப்பலில் சொந்த ஊருக்கு திரும்பிய பயணிகள் உற்சாகத்துடன் கூறினர்.

Update: 2020-06-02 22:00 GMT
தூத்துக்குடி,

கொரோனா ஊரடங்கால் இலங்கையில் தவித்த 713 இந்தியர்கள், இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். ஜலஸ்வா மூலம் நேற்று தூத்துக்குடிக்கு மீட்டு வரப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய பயணிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். அந்த கப்பலில் வந்த பயணிகளில் சிலர் கூறியதாவது:-

இலங்கையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வர முடியாமல் தவித்து கொண்டு இருந்தோம். விமானத்தில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த நிலையில், விமான நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விமான சேவையை நிறுத்தி விட்டது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தோம். இலங்கை அரசு எங்களை அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இந்திய கடற்படை கப்பல் மூலம் நாங்கள் மீட்கப்பட்டு உள்ளோம். கப்பலில் பெண்கள், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். கப்பலில் ஏறும்போதும் அனைத்து பரிசோதனைகளும் மேற்கொண்டனர். இங்கு வந்து இறங்கிய பிறகும் பரிசோதனைகள் செய்துள்ளனர்.

ஆனாலும் எங்கள் ஊருக்கு சென்ற பின்னர் முழு பரிசோதனை செய்த பிறகே நிலைமை என்னவென்று தெரியும். ஆனாலும் சொந்த ஊருக்கு வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் இருந்து மீட்டு வரப்பட்ட பயணிகளில், 5 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதாகி விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் என்றும், மேலும் 3 பேர் இலங்கைக்கு பீடி இலையை கடத்தி சென்றதாக கைதாகி விடுவிக்கப்பட்டவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்