தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-10 02:04 GMT
தர்மபுரி,

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தலா ரூ.7500-ம், மாநில அரசு தலா ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்க கோரி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்பாரப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சின்னசாமி தலைமை தாங்கினார். பெருமாள், முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

பென்னாகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ராமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அன்பு, வெள்ளிங்கிரி, முருகேசன், ரவி, குமார் ராஜி, கருவூரான் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

காரிமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயராமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோபால், சுப்பிரமணி,விஸ்வநாதன் மற்றும் விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நஞ்சப்பா தலைமை தாங்கினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் பூதட்டியப்பா, நகர செயலாளர் சலாம்பேக் மற்றும் நகர துணை செயலாளர் லாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல தளி பஸ் நிலையத்தில் மாநில விவசாய சங்க துணை தலைவர் லகுமய்யா தலைமையிலும், அஞ்செட்டி பஸ் நிலையத்தில் மாவட்ட கவுன்சிலர் பழனி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் முனிராஜ் உள்பட பலர் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஓசூர் ரெயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சேதுமாதவன், செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரேஷன் கடை வினியோகத்தை சீர்படுத்த வேண்டும், அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு ரூ.5 ஆயிரம் மற்றும் மாநில அரசு 7,500 ரூபாயை 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும், தானியங்கள், காய்கறிகள், பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்