வாகனத்துக்கு இ-பாஸ் பெற்றுத்தரலஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது

வாகனத்துக்கு இ-பாஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-06-13 00:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). கார் டிரைவர். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காரில் திருப்பதிக்கு சென்று வருவதற்காக இ-பாஸ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்காததால் நேரடியாக திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வந்த சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஜெகதீஷ் (வயது 28), திருவள்ளூர் தண்ணீர்குளத்தை சேர்ந்த தினேஷ் (26) ஆகிய 2 பேரும் சதீஷ்குமாரிடம் இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறி ரூ.2,500 லஞ்சம் தருமாறு கேட்டு பெற்றனர்.

2 ஊழியர்கள் கைது

நேற்று முன்தினம் அவர் மீண்டும் வந்து கேட்டபோது, அவர்கள் 2 பேரும் கூடுதலாக பணம் கொடுத்தால் தான் இ-பாஸ் பெற்று தர முடியும் என்று கூறினார். இதனால் சதீஷ்குமார், தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். அதற்கு அவர்கள் பணம் தர மறுப்பு தெரிவித்து சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில், திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்