பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: சொத்து பிரச்சினையில் கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது

ஆவூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்து பிரச்சினையில் அவரை கழுத்தை நெரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-06-14 23:30 GMT
ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர் மாத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சகுந்தலா(41). இவரது சொந்த ஊர் ஆவூர் அருகே உள்ள சூரியூரை சேர்ந்த அருங்கால்பட்டி என்ற கிராமம் ஆகும். இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் கடந்த 10 வருடங்களாக சகுந்தலா, முருகேசனை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் சூரியூர் ஊராட்சி ஆலங்குளத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சகுந்தலா தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதற்கிடையே முருகேசன் தனது மனைவியை பார்ப்பதற்காக ஆலங்குளத்தில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். மேலும் கடந்த ஒரு மாதமாக ஆலங்குளத்தில் உள்ள வீட்டிலேயே தங்கியிருந்து முருகேசன் வேலைக்கு சென்று வந்தார்.

கொலை

இந்நிலையில் முருகேசன் எஸ்.மேலப்பட்டியில் உள்ள தனது நிலத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். அதற்கு தனது மகன், மகள், மனைவி ஆகியோர் சேர்ந்து கையெழுத்து போட்டு எழுதி கொடுக்க வேண்டும் என்று சகுந்தலாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 11-ந் தேதி இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை வாயில் நுரை தள்ளியபடி சகுந்தலா தனது வீட்டில் இறந்து கிடந்தார்.

அக்கம், பக்கத்தினர் இது குறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வாயில் நுரை தள்ளியிருந்ததால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதி, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தற்கொலை என வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சகுந்தலா கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து தலைமறைவான முருகேசனை தேடி வந்தனர்.

கைது

நேற்று பேராம்பூர் குளத்துக்கரை அருகே பதுங்கியிருந்த முருகேசனை மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், கோவிந்தராஜ் ஆகியோர் பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முருகேசன் தனது சொத்தை விற்பதற்கு சகுந்தலா தடையாக இருந்ததால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், முருகேசனை கைது செய்து கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்