செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா சிறப்பு நிதி உதவியாக ரூ.7 கோடி கடன் வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி தகவல்

செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா சிறப்பு நிதி உதவியாக ரூ.7 கோடி கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

Update: 2020-06-15 03:20 GMT
நாமக்கல், 

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, புதுச்சத்திரம் மற்றும் மோகனூர் ஆகிய 4 வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ள தொழில் முனைவோர், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரின் தொழில்கள் மற்றும் வாழ்வாதாரம் புத்துயிர் பெறும் நோக்கில் கொரோனா சிறப்புநிதி உதவி தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கொரோனா சிறப்பு நிதிஉதவி தொகுப்பின் மூலம் நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு, 12 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.24 லட்சம் நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தால் தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் திட்டத்தின் மூலம் நீண்டகால தனிநபர் தொழில் கடனாக நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வீதம் 696 பேருக்கு ரூ.3 கோடியே 48 லட்சம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மூலம் கடனாக வழங்கப்படும். ஒருமுறை மூலதன நிதியாக உற்பத்தியாளர் குழு ஒன்றுக்கு ரூ.1½ லட்சம் வீதம் 35 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும்.

மொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கொரோனா சிறப்புநிதி உதவி தொகுப்பின் மூலம் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் 7 ஆயிரத்து 99 சுயஉதவிக்குழு குடும்பங்களுக்கு ரூ.7 கோடியே 8 லட்சத்து 25 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சினிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்