தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயிக்கும் மந்திரி சுதாகர் பேட்டி

கர்நாடகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்கும் என்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் தெரிவித்தார்.

Update: 2020-06-16 00:01 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உடல் கவச உடைகள் சர்வதேச தரம் கொண்டவை. எம்.டி.ஏ. மற்றும் சி.இ. ஆகிய அமைப்புகளால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து தான் நாங்கள் உடல் கவச உடைகளை வாங்குகிறோம்.

தனியார் மருத்துவமனைகள்

இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். தனியார் மருத்துவமனைளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சை கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்யும். இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும். கொரோனா நோயாளிகளிடம் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்தால் அத்தகைய மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா சிகிச்சை கட்டணத்தை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் அரசுடன் தனியார் மருத்துவமனைகளும் கைகோர்க்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறையுடன் ஆலோசிக்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.

697 பேருக்கு தொற்று

முகக்கவசம் அணிந்தால் 90 சதவீதம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். திருமண நிகழ்ச்சியிலும் இந்த விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியம்.

கொரோனா தொடர்பாக மக்களை ஆட்கொண்டுள்ள ஆதங்கத்தை தணிக்க ஊடகங்கள் உண்மை நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும். பெங்களூருவில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வரை 697 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது 330 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சார்ஸ் வைரசைவிட கொரோனா அபாயகரமானது அல்ல.

மரண விகிதம்

கொரோனா மரண விகிதம் கர்நாடகத்தில் 1.2 சதவீதமாக உள்ளது. இது தேசிய அளவில் 2.8 சதவீதமாக உள்ளது. சார்ஸ் வைரஸ் மரண விகிதம் 10 சதவீதமாக இருந்தது. அதாவது கொரோனா பரவும் அளவு தான் அதிகமாக உள்ளதே தவிர, மரண விகிதம் குறைவாக தான் உள்ளது. இத்தகைய அம்சங்களை ஊடகங்கள் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.”

இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்