பணம் பட்டுவாடா செய்யக்கோரி சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் போராட்டம்

பணம் பட்டுவாடா செய்யக்கோரி சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-06-16 08:11 GMT
சங்கராபுரம்,

சங்கராபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு சங்கராபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த தானியங் களை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். இந்த நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளுக்கான உரிய பணத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

இதனால் விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கேட்டபோது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான பதிலை அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு பணம் பட்டுவாடா செய்யக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், எங்களது நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு 40 நாட்கள் ஆகியும், அதற்கான பணம் இன்னும் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர்.

எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நெல் மூட்டைகளுக்கான உரிய பணத்தை உடனே பட்டுவாடா செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்