ஈரோட்டில் பல வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது - 56 பவுன் நகை-ரூ.5 லட்சம் மீட்பு

ஈரோட்டில் பல வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 56 பவுன் நகைகளும், ரூ.5 லட்சமும் மீட்கப்பட்டது.

Update: 2020-06-17 06:45 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை திருவேங்கடம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவரது நிறுவனத்தில் பணியாற்றி வரும் மேலாளர், தனது மகன் திருமணத்துக்காக ரூ.5 லட்சத்தை சதீஸ்குமாரிடம் கேட்டு இருந்தார். அவர் கேட்ட பணத்தை கொடுப்பதற்காக சதீஸ்குமார் கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி ஈரோடு செங்கோடம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வாகனத்தில் ரூ.5 லட்சத்தை வைத்துவிட்டு, மேலாளரின் வருகைக்காக சதீஸ்குமார் காத்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை அவர் பார்த்தபோது காணவில்லை. மர்மநபர் நைசாக பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஸ்குமார் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.5 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் பணத்தை திருடியவரை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், திருட்டு நடந்த திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டனர். அதில் திருட்டு நடந்தவரின் அடையாளம் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அந்த நபரின் புகைப்படத்தை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஈரோடு தனிப்படை போலீசார் நேற்று மூலப்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் ஒருவர் வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பழைய புவனகிரிரோடு தொழிலாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்கிற கார்த்தி (வயது 43) என்பதும், தற்போது ஈரோடு பிரப்ரோடு வாமலைவீதியில் குடியிருந்து வருவதும், அவர்தான் சதீஸ்குமாரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்த்தியை கைது செய்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கார்த்தி கொள்ளை அடிப்பதை மட்டுமே வேலையாக வைத்திருந்ததும், இதில் யாரையும் கூட்டு சேர்க்காமல் தனியாக சென்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து உள்ளதும் தெரியவந்து உள்ளது. ஈரோடு தாலுகா போலீஸ் நிலைய சரகத்துக்கு உள்பட்ட மூலப்பாளையம் பாரதிநகர், சென்னிமலைரோடு கே.கே.நகர், முள்ளாம்பரப்பு முல்லை நகர் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளிலும், வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலைய சரகத்துக்கு உள்பட்ட முனிசிபல்காலனி வள்ளலார் வீதியில் உள்ள வீட்டிலும் நகை, பணத்தை கொள்ளையடித்து இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கைதான கார்த்தியிடம் இருந்து 56 பவுன் நகைகள், ரூ.5 லட்சம், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியன மீட்கப்பட்டன.

கண்காணிப்பு கேமரா மூலமாக பிரபல கொள்ளையனான கார்த்தி சிக்கியுள்ளதால், பொதுமக்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் திருட்டு சம்பவத்தை தடுக்க சாலையை நோக்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்